நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்
இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
சிக்கனமான வாழ்க்கை மேற்கொண்டு, ரூ.3.90 கோடி சேமித்த அவர் தன் மனைவியை இழந்த பிறகு மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் இழந்துவிட்டதாக உணர்ந்திருக்கிறார்.
ஜப்பானைச் சேர்ந்த சுசுகி என்பவர் தனது இளம் வயது முதலே கடுமையான சிக்கனத்தைக் கடைபிடித்து வந்துள்ளார்.
அப்போதுதான் எதிர்காலத்தில் சேமிப்பு வைத்திருக்க முடியும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அவருக்குள்ளே விதித்து, சிக்கனத்தைக் கடைபிடித்து வந்திருக்கிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்ததால் பணத்தின் அருமை அறிந்து சிக்கனத்தை மேற்கொண்டுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகுகூட ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். இதன் விளைவாக 60 வயதில் ஓய்வு பெற்றபோது அவரிடம் நான்கு கோடி ரூபாய் வரை இருந்திருக்கிறது.
ஆனால் அந்த சேமிப்புப் பணம் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மரணமடைந்த பிறகு அவருடனான பயணங்களில் நல்ல உணவைச் சாப்பிடாமலும் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்காமலும் பணத்தை சேமிப்பதிலேயே கவனம் செலுத்திய இவருக்கு இறுதி காலத்தில் மிஞ்சியது பணம் மட்டுமே என்று உணர்ந்திருக்கிறார்.