சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த நவீன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்தநிலையில், நவீன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுப்பில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதே உண்மை. தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின்?
உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
உடனடியாக, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப்பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த நவீன்குமார்?
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன்குமார் (37), தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அந்த நிறுவனத்தில் ரூ.44.5 கோடி கையாடல் செய்ததாகக் கூறி, அவர் மீது நிறுவனத்தினர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருப்பினும், வழக்குப்பதிவு செய்யாமலேயே நவீனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பணத்தை நவீன் திரும்பிச் செலுத்தியிருந்தாலும், நவீனை பால் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டி வந்ததுடன், மன உளைச்சலும் அளித்ததாக நவீன் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நவீன், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுவதால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனையடுத்து, நவீனின் உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன்தான், அவரது மரணம் குறித்து தெரிந்து விடும் என்றும், அதற்கு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.