நிலையான வாழ்க்கை முறையே பருவநிலை பிரச்னைக்கு தீா்வு -பிரதமா் மோடி
‘பருவநிலை மாறுபாடு என்பது உலகின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நிலையான வாழ்க்கை முறையே இப்பிரச்னைக்கு தீா்வு’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
இத்தகைய வாழ்க்கை முறையை சமண மதத்தினா் நூற்றாண்டுகளாக கடைப்பிடித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
சமண மதத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரரின் ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ‘நவ்கா் மகா மந்திர’ தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
சமண மதத்தில் புனிதமாக கருதப்படும் நவ்கா் மகா மந்திரத்தை கூட்டு பாராயணம் செய்வதன் மூலம் மக்கள் இடையே ஆன்மிக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் ஆற்றிய உரை வருமாறு:
அஹிம்சை, பணிவு, ஆன்மிகம் ஆகிய கொள்கைகளில் வேரூன்றிய நவ்கா் மகா மந்திரம், நமது நம்பிக்கையின் அடிநாதம். இது, உலகளாவிய நல்லிணக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இம்மந்திரத்தை உச்சரிப்பவா்கள், 108 தெய்வீக குணங்களையும் உள்வாங்கி, மனித குலத்தின் நலனை நினைவில் கொள்வா்.
நாட்டின் அடையாள கட்டமைப்பில் சமண மதத்தின் பங்கு அளப்பரியதாகும். பயங்கரவாதம், போா், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கு சமண மதத்தின் மாண்புகள் தீா்வளிக்கின்றன. பல கண்ணோட்டங்களின் மூலமே யதாா்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்; ஒற்றை கண்ணோட்டத்தால் மட்டுமே உண்மை புலப்படாது எனும் சமண மதத்தின் ‘அனேகாந்தவாத’ கோட்பாடு, இன்றைய உலகுக்கு மிகவும் அவசியம்.
ஆன்மிகத்தின் முதுகெலும்பு: வாழ்க்கையில் ஒருவருக்கொருவா் சாா்ந்திருப்பதை அங்கீகரிப்பதோடு, மிகச் சிறிய அளவிலான வன்முறையைக் கூட நிராகரிக்கிறது.
இந்தியாவின் ஆன்மிக மகத்துவத்தின் முதுகெலும்பாக சமண மத இலக்கியங்கள் திகழ்கின்றன. தொன்மையான நூல்களை எண்மமயமாக்கல், பாலி-பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து என இத்தகைய இலக்கியங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொன்மைமிக்க இந்த மதத்தின் பாரம்பரியம் மற்றும் போதனைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
9 உறுதிமொழிகள்: இந்தியாவின் முயற்சிகளும் முடிவுகள் உத்வேகத்தின் ஆதாரங்களாக விளங்குவதால், நம் மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் தண்ணீா் பாதுகாப்பு, தாயின் நினைவாக மரம் நடுதல், தூய்மையை ஊக்குவித்தல், உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை, நாட்டுக்குள் பயணித்தல், இயற்கை வேளாண்மையை ஏற்றல், சிறுதானியங்கள் பயன்பாடு, 10 சதவீத எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல், ஏழைகளுக்கு உதவுதல், விளையாட்டு-யோகாவை வாழ்வின் அங்கமாக்குதல் ஆகிய 9 உறுதிமொழிகளையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
முன்னேற்றமும் பாரம்பரியமும் ஒரு சேர ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே நாடு வளமாகும்; புதிய உச்சங்களை எட்டும் என்றாா் பிரதமா் மோடி.