‘நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்’: குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான தீர்வுக் காண வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைக்கேடு இருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.3 அன்று கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு ஷிக்ஷாக் ஷிக்ஷா அதிகார் மன்சாவின் பிரதிநிதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டதாக குறிப்பிட்டு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கொல்கத்தா நீதிமன்றம் அந்த தேர்வாணையை முழுவதுமாக ரத்து செய்தது. மேலும், இந்தத் தீர்ப்பை கடந்த ஏப்.3 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
இந்த இரண்டு தீர்ப்புகளும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்தும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்யாமலும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிச் செய்திருந்தாலும் இருதரப்பினரும் தங்களது வேலையைத் தற்போது இழந்துள்ளனர். ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் நடைபெற்ற குற்றம் கண்டிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடாத ஆசிரியர்களும் தண்டனை அனுபவிப்பது நியாமன்று.
I have written to the Honourable President of India, Smt. Droupadi Murmu ji, seeking her kind intervention in the matter of thousands of qualified school teachers in West Bengal who have lost their jobs following the judiciary's cancellation of the teacher recruitment process.
— Rahul Gandhi (@RahulGandhi) April 8, 2025
I… pic.twitter.com/VEbf6jbY2F
மேலும், முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகக் கூடும். அந்த ஆசிரியர்களின் மன உறுதியும் ஊக்கமும் அழிக்கப்படுவதுடன் போதிய வருமானம் இன்றி அவர்களின் குடும்பங்களும் அவதிக்குள்ளாவார்கள்.
முன்னதாக, நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்; எனவே, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை நீங்கள் நன்கு உணர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இதில் தலையிட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர அரசு அனுமதிக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?