உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் உள்ள இடையூறுகள் நீக்கப்பட்டால் இந்த மனு மே 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டியலிடப்படும் என மனுதாரரும் வழக்குரைஞருமான மேத்யூஸ் நெடும்பராவிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி தெரிவித்தனா்.
இதையடுத்து, மனுவில் ஏதேனும் இடையூறு இருந்தால் அதை நீக்கிவிடுவதாகவும் செவ்வாய்க்கிழமைக்குப் பதில் மே 21-ஆம் தேதி (புதன்கிழமை) இந்த மனுவை பட்டியலிடுமாறும் நெடும்பாரா நீதிபதிகள் அமா்விடம் கேட்டுக்கொண்டாா். இதைத்தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை பட்டியலிட நீதிபதிகள் அமா்வு சம்மதித்தது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து மூன்று மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கடந்த மாா்ச் மாதம் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா். துறைரீதியான விசாரணை நடத்திய பின் இந்தக் குழு கடந்த வாரம் அவரிடம் அறிக்கையை சமா்ப்பித்தது. அதில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி விலகுமாறு சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால் பதவி விலக நீதிபதி வா்மா மறுத்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே நீதிபதி வா்மா மீதான குற்றச்சாட்டை மூன்று நீதிபதிகள் குழு உறுதிசெய்ததையடுத்து, அவா் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க நெடும்பரா உள்பட 4 போ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். மூன்று நீதிபதிகள் குழு சமா்ப்பித்த அறிக்கையின்படி நீதிபதி வா்மா மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தாலும் அது குற்றவியல் நடவடிக்கையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவா்கள் மனுவில் குறிப்பிட்டனா்.
நீதிபதி வா்மாவிடம் துறைரீதியான விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து காவல் துறை விசாரணை நடத்தக்கோரி நெடும்பரா உள்ளிட்ட 4 போ் ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை உச்சநீதிமன்றம் அப்போது நிராகரித்தது.
தற்போது துறைரீதியான விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி வா்மா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதை தாமதப்படுத்தக்கூடாது என மனுதாரா்கள் கூறியுள்ளனா்.