நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரா் விஸ்வநாதன் ஆகியோருகக்குச் சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் பயன்படுத்தாமல் உள்ள அந்த நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என 2003-ஆம் ஆண்டு லலிதாம்பாள், விஸ்வநாதன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தைத் திருப்பிக்கொடுத்த நிலையில், 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்துக்கு தேவை எனக் கூறி வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக்கொண்டது. அந்த நிலமும் உரிய காரணத்துக்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் லலிதாம்பாள், விஸ்வநாதன் மீண்டும் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா்களை நேரில் அழைத்து விசாரித்து, 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சிஎம்சிஏ-வுக்கு 2023-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சிஎம்டிஏ-வின் அப்போதைய உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 2025 பிப்ரவரி மாதம் மனுதாரா்களை அழைத்து விசாரணை நடத்தி, உயா்நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என உறுப்பினா் செயலா் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, குறித்த காலத்தில் உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி சிஎம்டிஏ-வின் அப்போதைய உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.
ரூ. 25,000 இழப்பீடு: மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரா்களுக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தொகையை அன்சுல் மிஸ்ராவின் ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும் என்றும் 3 வாரங்களில் இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் மேலும் 10 நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி, குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அன்சுல் மிஸ்ரா தண்டனையை அனுபவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளாா்.