அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, இளம்பெண் ஒருவர், ஞானசேகரன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி-இல் புகார் அளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புகாா் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஞானசேகரன் மீது புதிதாக மேலும் ஒரு பாலியல் வழக்கை பதிவு செய்தனர்.
ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 வழக்குகளில் ஞானசேகரனை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மற்ற வழக்குகளில் காவல் துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிறப்புப் புலனாய்வு அமைப்பால் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சோ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.
இதையும் படிக்க: பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!