நீலகிரி: புத்துார்வயலில் பழங்குடியினர் கொண்டாடிய 'புத்தரி' அறுவடை திருவிழா! | Photo Story
காட்டு நாயக்கர், குரும்பர், பனியர், இருளர் பழங்குடிகளுடன் மவுண்டானா செட்டி சமூகத்தினரும் இணைந்து, ஐப்பசி முதல் வாரத்தில் விரதமிருந்து, 'புத்தரி' அறுவடைத் திருவிழாவுக்காக தயாராகின்றனர்.
திருவிழா நாளன்று விரதமிருக்கும் நபர்கள் மட்டுமே அறுவடை செய்யும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். புத்தாடை அணிந்த அவர்கள் நெல் வயலில் பூஜை செய்து, பாற்கதிர் பருவத்தில் இருக்கும் நெல் கதிரை அறுவடை செய்ய தேர்வு செய்கின்றனர்.
மூன்று கட்டு அளவுக்கான நெல் கதிரை தேர்வு செய்து, அந்த அளவு இடத்தை குறித்துக் கொண்டு, ஒருவர் அறுவடை செய்ய, மீதமுள்ள நபர்கள் அவற்றில் இருக்கும் களையை ஆய்ந்து, ஒரு பாெதியாக கட்டி தலையில் சுமந்து கடவுளை வணங்கி ஊர்வலம் புரப்படுகிறது.
ஊர்வலமாக விமலகிரியில் உள்ள அவர்களது மண்டபத்திற்கு (மண்டபம் என்பது அவர்கள் வழிபாடு நடத்தும் ஒரு சிறிய இடம்) காெண்டு வருகின்றனர்.
தலையில் சுமந்து வந்த நெல் கதிரை மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்யும் பழங்குடிகள், நெல்கதிரை மூன்று பங்குகளாக பிரித்து மங்கூழி பகவதி அம்மன் கோவிலுக்கு ஒரு பங்கையும், புத்துார்வயல் மகா விஷ்ணு கோயிலுக்கு ஒரு பங்கையும் தலையில் சுமந்து செல்கின்றனர்.
அவ்வாறு நெல்கதிரை தலையில் சுமந்து செல்பவர்கள் மண்டபத்திற்கு திரும்பும் வரை பழங்குடியினர் நடனமாடி மகிழ்கின்றனர்.
மீதமிருக்கும் ஒரு பங்கு நெற்கதிர் நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோயிலுக்கு ஊர்வலம் புறப்படுகிறது. அவ்வழியில் கோத்தர் மற்றும் தாேடர் பழங்குடிகளும் ஊர்வத்தில் இணைகின்றனர்.
ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பழங்குடிகள் சுமந்து வந்த நெற்கதிரை கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் வைக்க, அங்கிருந்து கோயில் நம்பூதிரி நெற்கதிரை தலையில் சுமந்தபடி, பழங்குடிகளுடன் ஊர்வலமாக கோயிலுக்குள் செல்கிறார்.
காேயிலை மூன்று முறை சுற்றும் நம்பூதிரி அந்த நெற்கதிரை கருவரை வாசலில் வைத்து பூஜித்து, கருவரைக்குள் எடுத்து செல்கிறார்.
வழிபாடுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு இந்த நெற்கதிரில் இருந்து சிறு துளிகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.