நெல்லையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வலியுறுத்தி, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா்கள் தொடா்ந்து தாக்கப்பட்டு வருவதால், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
தமிழக அரசு, ரூ. 30இல் இருந்து ரூ. 120 ஆக உயா்த்திய வழக்குரைஞா் சேமநல நிதி முத்திரைத் தாள் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
வழக்குரைஞா்களின் மறைவுக்குப் பிந்தைய நிதி உதவியை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும்.
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் புதன்கிழமை முதல் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
ஏராளமான வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.