நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பத்துக்கு மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.