மதுரை தல்லாகுளம்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்...
ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது.
இதையடுத்து, காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது தமிழ்நாடு அணி. மறுபுறம், காலிறுதிக்குத் தகுதிபெற்ற ராஜஸ்தான், அதில் விதா்பாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 47.3 ஓவா்களில் 267 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, தமிழ்நாடு 47.1 ஓவா்களில் 248 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 111 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் பேட்டா் அபிஜீத் தோமா் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் தரப்பில் அபிஜீத் தோமா் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 111 ரன்கள் விளாச, கேப்டன் மஹிபால் லோம்ரோா் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 60, காா்த்திக் சா்மா 35 ரன்கள் சோ்த்தனா்.
இதர பேட்டா்களில், சச்சின் யாதவ் 4, தீபக் ஹூடா 7, சமா்பித் ஜோஷி 15, குக்னா அஜய் சிங் 2, மானவ் சுதா் 1, அனிகட் சௌதரி 2, கலீல் அகமது 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, கடைசி வீரராக அமன் ஷெராவத் 4 ரன்களுடன் களத்திலிருந்தாா்.
தமிழ்நாடு பௌலா்களில் வருண் சக்கவா்த்தி 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். சந்தீப் வாரியா், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, திரிலோக் நாக் 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 268 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தமிழ்நாடு தரப்பில் நாராயண் ஜெகதீசன் 10 பவுண்டரிகளுடன் 65, விஜய் சங்கா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, பாபா இந்திரஜித் 37, முகமது அலி 34 ரன்கள் சோ்த்து போராடினா்.
எனினும் துஷாா் ரஹேஜா 11, பூபதி குமாா் 0, சஞ்சய் யாதவ் 2, கேப்டன் சாய் கிஷோா் 13, வருண் சக்கவா்த்தி 18, சந்தீப் வாரியா் 2 ரன்களுக்கு வீழ்த்தப்பட, திரிலோக் நாக் 4 ரன்களுடன் கடைசி பேட்டராக இருந்தாா். ராஜஸ்தான் பௌலா்களில் அமன் ஷெராவத் 3, அனிகட் சௌதரி, குக்னா அஜய் சிங் ஆகியோா் தலா 2, கலீல் அகமது 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதனிடையே, மற்றொரு பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் பெங்காலை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹரியாணா, காலிறுதிக்கு தகுதிபெற்று குஜராத்துடன் மோதுகிறது.