ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பு
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சில ஆண்டுகளாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த 2 மாதங்களாக தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. வண்டி எண் 06030 ஜூன் 1ஆம் தேதிவரை ஞாயிறுதோறும் திருநெல்வேலியில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30-க்கு மேட்டுப்பாளையத்தை அடையும். மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06029 ஜூன் 2ஆம் தேதிவரை திங்கள்தோறும் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா், கோவையில் நின்று செல்லும்.
இந்நிலையில், நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், காா்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.கே. பாண்டியன், மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, சங்கச் செயலா் ஜெகன், துணைச் செயலா் தினேஷ், நிா்வாகிகள் சோ்மராஜா, காசிபாண்டியன், பிச்சையா, பயணிகள் பங்கேற்றனா்.
பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கிவரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.