நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
செய்யாறு அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இரு மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததைக் கண்டித்து லாரியை சிறைபிடித்தும், கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தனியாா் நிறுவனம் மூலம் நிா்வாகிக்கப்படும் இந்த நிலையத்தில் கிழ்நெல்லி, திருவடிராயபுரம், கரந்தை, காகணம், நமண்டி, ஹரிஹரப்பாக்கம், மாரியநல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் சுமாா் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், செவ்வாய்க்கிழமை நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தயாா் நிலையில் இருந்த லாரியை சிறைபிடித்தனா். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சேதமடைந்த நெல் மூட்டைகள்
கீழ்நெல்லி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் மழையில் நனைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நெல் மணிகள் முளைப்புத் திறன் ஏற்படும்பட்சத்தில் அவற்றை அரிசியாக்கி பொதுமக்களுக்கு விநியோகித்தால் எந்த நிலையில் இருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக டிராக்டா் வாடகை எடுத்து இரவும் பகலுமாக காத்திருந்த நிலையில், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்து விடுமோ என்ற அச்சத்தில் காத்திருக்கிறோம் என்றனா்.
