ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேச வேண்டாம் என வலியுறுத்தப்பட்டேன்: திக்விஜய் சி...
நொறுக்குத் தீனி! - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தாள் வேலாயி. இரண்டாவது மகன் வீட்டில்தான் வாசம். மருமகள் புழக்கடையில் பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்தும் சத்தம் கேட்டது. மகன், கிடை போட்டு வளர்த்து வரும் வெள்ளாட்டை விலை பேச சந்தைக்குக் கூட்டிப் போயிருக்கிறான். வியாபாரம் முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது நொறுக்குத் தீனியோடுதான் வரவேண்டும் என்று மகனிடம் கட்டளை போட்டிருந்தாள் வேலாயி.
காலையில் மருமகள் பித்தளை லோட்டாவில் 'டங்' என்று வைத்துப் போகும் சுக்கு காபியை வயிற்றுக்குள் இறக்கி, எந்த மருமகள்களுக்குத்தான் மாமியாரைக் கண்டால் பிடிக்கிறது உலகத்தில் முதல் எதிரியாக அல்லவா பார்க்கிறார்கள்!
காலைக் கடனோடு குளியலையும் முடித்து திண்ணைக்கு வந்தால் நாள் பூரா அங்கே நொறுக்குத் தீனியோடே கழியும். பல்லெல்லாம் கொட்டிப் போனாலும் கடினமான திண்பண்டத்தைக் கூட போனால் போகிறதென்று விட்டுவிடாமல் ஊறப் போட்டாவது உள்ளே தள்ளுவாள். பிறகுதான் பரண் மேல் கிடந்ததென்று வெற்றிலை இடிக்கும் 'உரற்கல்லை' எடுத்துக் கொடுத்தாள் மருமகள். அதற்கப்புறம் சாப்பாடு எதுவானாலும் நேரத்துக்கு அவளிடத்திற்கே வந்துவிடும்!

தெருவில் வருவோர் போவோரில் பலர் அவளிடம் நலம் விசாரித்து பேசியபடியே அவரவர் வேலைக்குப் போவதும் வருவதுமாக இருப்பார்கள். பேசுபவர்கள் மன நிலைக்குத் தகுந்த பதிலைக் கூறி பொழுது போக்கும் வேலாயி, கேட்கும் கேள்வியை வைத்தே "எனக்கென்ன குறை? நா நல்லாத்தேன் இருக்கேன்!" என்றும் சம்பிரதாயத்துக்குக் கேட்பவர்களிடம், "ஏதோ இருக்கேன்..
எமன் எப்ப வந்து கூப்பிடுவான்னு பார்த்துகிட்டு" என்பாள்.
வேலாயிக்கு வயது எத்தனை இருக்கும் என்று கணிக்க முடியாது. ஊரில் வாழும் பெரிசுகள் சொல்வதை வைத்துப் பார்த்தால் தொண்ணூறு வயது கடந்திருக்கலாம். வேலாயிடம் கேட்டால், "அந்தக் காலத்துல அதையெல்லாம் யாரு எழுதிவெச்சா..? எதோ அவன் வான்னு கூப்பிடுற மட்டும் இருந்துட்டு போறேன் .." என்று ஆகாசத்தைக் காட்டுவாள்.
அந்த தெருவின் அடையாளமாகிப் போனாள் வேலாயி. யார் வீட்டுக்கு யார் வருகிறார்கள்? யார் வீட்டில் என்னென்ன நடக்கிறது என்பதெல்லாம் அத்துப்படி வேலாயிக்கு. ஏதாவது விஷயம் சேகரிக்க வேண்டுமானால், வேலாயி வாய்க்கு நொறுக்குத் தீனி போட்டால் போதும். கேட்டதற்கு மேலே கறந்துவிடலாம். காது மந்தமாகி, கண் பார்வை குறைந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டமாட்டாள் வேலாயி.
இந்த சர்க்கரை நோய்தான் அவளைப் படுத்தி எடுக்கிறது. நல்லது கெட்டது என்று எதையும் நினைத்த நேரத்தில் இப்போதெல்லாம் திண்பதற்கு முடிவதில்லை. வலது கை விரலொன்றில் சூட்டுக் கொப்புளம் வந்து, அது சீழ் பிடித்து விரல் அழுகி வரவும்தான் தெரிந்தது சர்க்கரை நோவு.
அதுவரை எது சமைத்தாலும் தள்ளுபடி இல்லாமல் சாப்பிட்ட வேலாயி வாய்க்கு கடிவாளம் போட்டுவிட்டாள் மருமகள். மாமியாருக்குச் சோறு போடுவதே பாரம் என்று நினைப்பவள், கண்டதைத் தின்று, உடம்புக்கு ஒன்றென்றால் அடிக்கடி
ஆகும் வைத்திய செலவுக்கு யார் தண்டம் அழுவது என்ற நினைப்புதான். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படுகிறவள் கிடையாது வேலாயி.
பக்கத்து ஊரிலிருக்கும் மூத்த மகன் தாயைப் பார்க்க வரும் போதெல்லாம், "கை செலவுக்கு வெச்சிக்க.." என்று சொல்லி அம்மா கையில் பணம் தந்துவிட்டுப்போவான். நிமிட நேரத்திற்குள் அவையெல்லாம் வேலாயி இடுப்பிலிருக்கும் சுருக்குப் பைக்குள் புகுந்து கொள்ளும். யாருக்கும் தெரியாது வேலாயியிடம் எவ்வளவு பணம் இருக்கிறதென்று.

மூத்த மகன் வழி பேரப் பிள்ளைகள்.. இளைய மகன் வீட்டு
பேரப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வேலாயி பாட்டியை வஞ்சனை இல்லாமல்தான் பார்த்துக்கொண்டார்கள். வேலாயிக்கும் நொறுக்குத் தீனிகளுக்குமான பந்தம் பிரிக்க முடியாததாகிப் போயிருந்தது மேலும். நம் எல்லோருக்கும் ஒருநாளைப் போல் இன்னொரு நாள் சொல்லி வைத்த மாதிரியா விடிந்து விடுகிறது? அப்படி உறுதியாக சொல்லிவிட முடிவதில்லையே...!
வேலாயிக்குப் பிடித்த நொறுக்கு தீனிகள் அனைத்தும் வகை வகையாக வரிசையாக தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க...,
அவற்றுக்கு நடுவே அவள் தீனியை இடித்து தின்னும் உரற்கல்லும் இருந்தது! போட்டிருந்த மாலைகளுக்கு நடுவே போட்டோவில் பொக்கை வாயோடு சிரித்துக் கொண்டிருந்த வேலாயியின் வருஷத் திவசத்தை வேடிக்கை பார்த்தன அவளுக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகள் அத்தனையும்.
-இந்திராணி நாகசுப்ரமணியம்.
ஒசூர் -9
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel