பகலில் டிரோன்; இரவில் தெர்மல் கேமரா... 24 மணி நேர கண்காணிப்பில் பந்தலூர் யானை!
அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் யானையை பந்தலூர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து நிரந்தரமாக அடர் வனத்திற்குள் விரட்டும் அதிதீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது வனத்துறை. யானை விரட்டும் படை, வேட்டை தடுப்பு காவலர்கள் என தனிக்குழு அனைத்தும் கண்காணித்து வந்தனர். அப்படியிருந்தும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு சென்றது.
மதம் பிடித்த யானையின் சாணத்தில் ஸ்பிரே, புகை மற்றும் மிளாகாய் தூள் தடவப்பட்ட துணிகளாலான தோரணம் என பாரம்பர்ய மாற்று வழிமுறைகளில் களம் இறங்கியிருக்கிறது வனத்துறை. மேலும் பகலில் டிரோன் கேமராக்கள் மற்றும் இரவிலும் துல்லியமாக தெரியும் தெர்மல் கேமிரா மூலமும் அந்த யானையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த யானையின் படங்களை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறது வனத்துறை.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "யானை - மனித எதிர்கொள்ளல்களை தவிர்ப்பதே எங்களின் முதல் நோக்கமாக இருக்கிறது. இந்த இளம் ஆண் யானை கதவு, ஜன்னல்களை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்து அரிசியை எடுத்து செல்லும் பழக்கத்தை கொண்டிருக்கிறது. அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இந்த யானையை காட்டுக்குள் விரட்டுவது பெரும் சவாலாக இருக்கிறது.
யானைகளை காட்டுக்குள் விரட்ட பாரம்பர்ய யுக்தி முதல் நவீன தொழில்நுட்பங்கள் வரை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மக்களையும் யானைகளையும் ஒரே இடத்தில் பாதுக்காக்க வேண்டிய நிலை தான் இங்கு இருக்கிறது" என்றனர்.