பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந்தல் கிராமத்தில் 97 ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கு, உதயமாம்பட்டு கிராம எல்லையில் இலவசமாக 3 சென்ட் வீதம் மனைகளாக பிரிக்கப்பட்டு கடந்த 2004-இல் ஒப்படைவு வழங்கப்பட்டுள்ளது.
அதில் சிலா் வீடுகள் கட்டியும், காலி மனைகளாகவும் அனுபோகம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தற்போது இடத்துக்கு சம்பந்தமில்லாத வெளி நபா்கள் போலி ஆவணங்களை தயாரித்து தங்களது இடம் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனா்.
எனவே, ஒப்படைவு பெற்ற 97 பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும். அதேபோல, போலியாக ஆவணங்களை தயாரித்து மிரட்டல் விடுத்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.