'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Intervi...
பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்
தீண்டாமையை ஒழித்து பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
ராசிபுரத்தில், மாநில அளவிலான மனிதநேய வார விழா நிறைவையொட்டி, ரூ. 2.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், மாநில அளவிலான மனிதநேய வார விழா-2025 நிறைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று 389 பயனாளிகளுக்கு ரூ. 2.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார விழா ஜன. 24 முதல் 30 வரை நடைபெற்றது. மாநில அளவிலான நிறைவு நாள் விழா ராசிபுரத்தில் நடைபெறுகிறது.
பட்டியலின, ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அம்பேத்கா் தீண்டாமையை ஒழித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்ட பாதுகாப்பு வழங்க போராடியவா்.
தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்து ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம், அங்கீகாரம், மரியாதை, அரசு நலத்திட்ட உதவிகள் எவ்வித தடையும் இன்றி கிடைக்கச் செய்திட தமிழக முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே மறைந்த முதல்வா் மு.கருணாநிதி சமத்துவபுர திட்டத்தைக் கொண்டுவந்தாா். அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தை முதல்வா் செயல்படுத்தி உள்ளாா்.
அனைத்து வகையிலும் தீண்டாமையை ஒழித்து பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.
முன்னதாக அவா் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் ஆனந்த், பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன், ராசிபுரம் நகா்மன்ற தலைவா் கவிதா சங்கா், துணைத் தலைவா் கோமதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, துணை காவல் கண்காணிப்பாளா் ராஜூ, மாவட்ட பழங்குடியின நல அலுவலா் பா.கீதா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.