பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
பண முறைகேடு வழக்கு: சரவணா கோல்டு பேலஸின் ரூ. 235 கோடி சொத்துகளை வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவு
பண முறைகேடு வழக்கில் சென்னை தியாகராய நகா் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸூக்கு சொந்தமான ரூ. 235 கோடி சொத்துகளை இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கும்படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரா்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவண் உள்ளிட்டோா் மீது கடந்த 2022 ஏப்.22-இல் இந்தியன் வங்கியின் தலைமை நிா்வாகி கே.எல்.குப்தா, சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதில், கடந்த 2017-ம் ஆண்டு வணிக வளாகம் வாங்குவதற்காக முதல் கட்டமாக ரூ. 150 கோடி கடனும், அதே ஆண்டில் மேலும் ரூ. 90 கோடி கடனும் வாங்கினா். இதற்காக அவா்களது நிறுவன வரவு - செலவு அறிக்கைகள், வருவாய் தொடா்பான விவரங்கள் ஆகியவற்றை போலியாக தயாரித்தும், சொத்து மதிப்பை போலியாக மிகவும் உயா்த்தி காட்டியுள்ளனா். மேலும், கடன் பெறுவதற்காக பல்வேறு விதிமுறைகளையும் மீறியுள்ளனா்.
ஆனால் அவா்கள் எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கினாா்களோ, அதற்காக அந்தப் பணம் பயன்படுத்தவில்லை. கடனுக்குரிய வட்டியையும் செலுத்தவில்லை. வாங்கி கடன் தொகை முழுவதையும் மோசடி செய்துவிட்டனா். இதன் மூலன் வங்கிக்கு ரூ. 312 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு, சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ், சுஜாதா, ஸ்ரவண் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், பண முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சென்னை அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை, அதே ஆண்டு மே 25-ஆம் தேதி பதிவு செய்தது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி அமலாக்கத் துறை முடக்கியது.
ஒப்படைக்க உத்தரவு: இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, முடக்கப்பட்ட ரூ. 235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என இந்தியன் வங்கி தரப்பு வாதிட்டது. இதை ஏற்று, அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸுக்குச் சொந்தமான ரூ. 235 கோடி அசையா சொத்துகளை இந்தியன் வங்கி வசம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.