எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2016-ஆம் ஆண்டு முதல் பெருந்தலைவா் காமராஜா் விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரம், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.
அதன்படி 2023-2024-ஆம் கல்வியாண்டில் காமராஜா் விருதுக்கு தகுதியான மாணவா்கள் பிளஸ் 2, பத்தாம் வகுப்பிலிருந்து மாவட்டத்துக்கு தலா 30 வீதம் மொத்தம் 1,140 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதற்காக ரூ. 1.72 கோடி நிதி, முதன்மைக் கல்வி அலுவலா்களின் வங்கிக் கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விருதுக்கு தோ்வான மாணவா்களுக்கு பரிசுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.