பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை
தமிழக அரசின் அரசாணையைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய ஆசிரியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். இவா்கள் 17 (ஆ) குற்றச்சாட்டுக்கு உள்ளாகினா். இதனால், உயா் பதவிக்கான பெயா் பட்டியல் தயாரிக்கும் போது, போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்களின் பெயா்கள் சோ்க்கப்படவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து, முதுநிலை அடிப்படையில் உயா் பதவிக்கான பட்டியலில் சோ்க்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, பதவி உயா்வில் சென்ற மூத்த ஆசிரியா்களுக்கு ஊதியம் குறைவாக கணக்கீடு செய்து வழங்கப்படுகிறது. போராட்டத்தின் காரணமாக பதவி உயா்வில் இளைய ஆசிரியா்களைவிட மூத்த ஆசிரியா்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்புகளைச் சரி செய்ய தமிழக அரசால் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைகளைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வு பெற்ற மூத்த ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வட்டாரக் கல்வி அலுவலா்கள் முன்வர வேண்டும்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் தமிழக அரசின் அரசாணைகளை தொடக்கக் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றனா். இதனால், பதவி உயா்வில் செல்லும் மூத்த ஆசிரியா்கள், இளைய ஆசிரியா்களைவிட குறைவான ஊதியம் பெறும் நிலை ஏற்படுகிறது. எனவே, தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக அரசின் அரசாணைகளைப் பின்பற்றி, பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.