கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
பனாமா கால்வாய் சர்ச்சை: டிரம்ப்பை எதிர்க்கும் பனாமா அதிபர்!
பனாமா கால்வாயைத் திரும்பப் பெறவிருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து பனாமா கால்வாய் பனாமா நாட்டின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று பனாமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜன. 20) பதவியேற்றார். பதவியேற்றதும் அமெரிக்காவில் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றிய டொனால்ட் டிரம்ப் சில முக்கிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.
பனாமா கால்வாயும் டிரம்ப் உரையும்
அமெரிக்கா வசமிருந்த பனாமா கால்வாயை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் டிச. 31, 1999 ஆம் ஆண்டு செய்துகொண்ட டோரிஜ்ஜோஸ் - கார்ட்டர் உடன்படிக்கையின்படி பனாமாவிடம் வழங்கினார். அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்தக் கால்வாய் பனாமா நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது.
இதையும் படிக்க | பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்: விலகுவதற்கான உத்தரவில் டிரம்ப் மீண்டும் கையெழுத்து
தனது உரையில் இதுகுறித்து விமர்சித்துப் பேசிய டிரம்ப், “ஒருபோதும் வழங்கியிருக்கக் கூடாத ஒரு முட்டாள்தனமான பரிசு அது. பனாமா கால்வாயை தற்போது சீனா இயக்கி வருகிறது. நாங்கள் அதை பனாமாவிற்கு கொடுத்தோம். சீனாவிற்கு இல்லை. அதை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
சீனாவின் தலையீடு குறித்து பனாமா மறுப்புத் தெரிவித்த போதிலும் பனாமா மீதான அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கையை டிரம்ப் நிராகரிக்க மறுத்த சில வாரங்களில் அவர் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
பனாமா அரசு பதிலடி
டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பனாமா அதிபர் ஜோஸ் ராவுல் முலினோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “டிரம்ப்பின் வார்த்தைகளை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். கால்வாய் பனாமாவுக்குச் சொந்தமானது. அது இப்போதும், எப்போதும் பனாமா நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கால்வாய் யாரிடமும் சலுகையாகப் பெறப்பட்டது அல்ல. தலைமுறைகளாகப் போராடியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி கால்வாய் பனாமா வசமுள்ளது. அன்று முதல் இன்று வரை 25 ஆண்டுகளாக எந்தத் தடையுமின்றி அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வர்த்தகம் செய்யும் வகையில் பொறுப்புடன் அதை நிர்வகித்து விரிவுபடுத்தியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஹிட்லர் பாணியில் எலான் மஸ்க்! என்ன நடந்தது?
மேலும், சீனாவோ வேறு ஏதேனும் நாடுகளோ இந்த நீர்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு முக்கிய வர்த்தகப் பாதையான பனாமா கால்வாய், உலகளாவிய கடல் போக்குவரத்தில் சுமார் 6 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இது சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான பாதையாக உள்ளது.