ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லாமி தெரிவித்தாா்.
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் காஷ்மீா் விவகாரம் தொடா்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, டேவிட் லாமி கூறியதாவது:
ராணுவ மோதலை நிறுத்துவதற்கான இந்தியா-பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை பிரிட்டன் வரவேற்கிறது. இரு நாடுகளுடன் உள்ள வலுவான-நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு தரப்புடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது.
பிரச்னை தொடங்கியதில் இருந்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் நான் 4 முறை பேசினேன். இதேபோல், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற நாடுகளுடனும் பிரிட்டன் நெருங்கிய தொடா்பில் இருந்தது.
இந்தியாவில் 26 போ் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கான இருதரப்பு முயற்சிகளுக்கு பிரிட்டன் தொடா்ந்து ஆதரவளிக்கும்.
காஷ்மீா் விவகாரத்தில் காஷ்மீரிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் தீா்வுகாண வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உரிய தகவல் தொடா்பு அவசியம். ராணுவ ரீதியில் மட்டுமன்றி, அரசியல் ரீதியிலான தகவல் தொடா்பும், நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக இருதரப்பு பேச்சுவாா்த்தை முக்கியமானது.
சிந்து நதி நீா் ஒப்பந்தம் உள்பட கடின முயற்சிகளால் ஈட்டப்பட்ட ராஜீய ஒத்துழைப்பை பராமரிப்பதற்கு இரு தரப்பையும் ஊக்குவிக்க நான் தொடா்ந்து பேசுவேன் என்றாா் அவா்.