செய்திகள் :

திண்டிவனம் அருகே 1,200 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு! - ஆய்வாளர் சொல்வதென்ன ?

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெருங்குக்கள் அருகே அமைந்துள்ளது டி.நல்லாலம் கிராமம். இங்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து மார்ச் மூன்றாம் தேதி சனிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நம்மிடம் பேசிய வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம். விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல் சுற்று வட்டாரத்தில் பழம்பெறும் சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்து. இவற்றை மையமாக வைத்துக்கொண்டு பெருமுக்கலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள T.நல்லாளம்  கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டதில், மஞ்சள் பூசப்பட்ட நிலையில் சிலை ஒன்று வழிபாட்டில் இருந்தது தெரியவந்தது. அதை சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டதில்தான், பல்லவர் காலத்தை சேர்ந்த சிற்பம் என தெரிய வந்தது.

கொற்றவையின் சிற்பமானது சுமார் 6 அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையினை மூன்றடுக்கு கரண்ட மடங்கு அழகாக அலங்கரிக்க, வட்டமான முகத்தில் புண் சிரிப்புடன் தடித்த உதடுகளுடன் செவிகளில் பத்திரம் மற்றும் மகரகுண்டங்களுடன் தனது கழுத்தில் சரப்பளியுடன் அழகாக காட்சியளித்தார். 

எட்டு கரங்களில், மேல் வலது கரம் பிரயோக சக்கரத்தை ஏந்தியும், வலது கரங்கள் போர்வாள் ,அம்பு மற்றும் சர்பம் ஏந்தியும், மேல் இடது கரம் சங்கு ஏந்தியும் ஏனைய கைகள் மலர்மொட்டு, வில், கேடயம் போன்றவற்றை ஏந்திய நிலையிலும் காணப்பட்டது. வழக்கமான சிற்பங்களில் கொற்றவை அருகே காணப்படும் வீரர்கள் சிற்பத்தில் காணப்படவில்லை. மேலும் கொற்றவைக்கு அருகில் இடது புறமாக கிளி ஒன்று காணப்படுகிறது. எருமையின் தலை மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு கொற்றவை வீரமாக காட்சி அளிக்கிறார். கொற்றவையின் ஆடை ,ஆயுதங்களை வைத்து இது கி.பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் இக்கொற்றவை சிலைக்கு அருகில் இரண்டு பலகைகள் மண்ணில் சாய்ந்த வண்ணம் காணப்பட்டது. சுத்தம் செய்த பிறகு தான் அவை பல்லவர் கால முருகர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் என தெரியவந்தது.

அழகிய கரண்டு மகுடம் அவரது தலையினை அலங்கரிக்க ஒரு காதினில் பத்திர குண்டலம் மற்றொரு காதலில் மகர குண்டலமும் கழுத்தில் பட்டையான சரப்பளி மற்றும் உதிரபந்தம் அணிந்து கம்பீரமாக யானை மீது அமர்ந்து அழகுற காட்சி தருகிறார், விநாயகர்.

முருகரது வலது கையில் வேல் மற்றும் இடது கையினை இடைமீது வைத்து இடது புறம் சேவலும் காணப்படுகிறது. சேவலுடன் கூடிய பல்லவர் கால முருகன் சிற்பம் இதுவரையில் சொற்பமாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை வைத்து பார்க்கும்போது இவை எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும்... இவ்விடத்தில் பிரமாண்டமான பல்லவர் கால கோவில் ஒன்று இருந்து அழிந்து உள்ளதும் இதன் மூலம் தெரிய வருகிறது" என்றார்.