Stalin: "சட்டமன்றங்களை முடக்கும் முயற்சியா?" - ஸ்டாலின் முன்வைத்த 3 கேள்விகள்!
ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள குறிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவரது சமூக வலைத்தள பதிவில், "ஏற்கெனவே தீர்த்துவைக்கப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு நிலைப்பட்டை உடைக்க முயலும் மத்திய அரசினுடைய குடியரசுத் தலைவரின் குறிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக ஆளுநர் பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு மக்களின் ஆணைகளை மழுங்கடிக்க முயற்சித்தார் என்பது இந்த முயற்சியின் மூலம் தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குடியரசுத் தலைவர் குறிப்புகள்...
தமிழக சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது குறித்து நீதிமன்றம் அதன் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது.
ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த மசோதாக்கள் நிறைவேறியதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.
இந்த நிலையில், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்கும் நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் எப்படி இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுவின் குறிப்புகளை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் முயற்சி"
மேலும் முதலமைச்சரது பதிவில், "மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் முயற்சியே தவிர ஒன்றுமில்லை.
அதையும் தாண்டி சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் கேள்விக்கு உட்படுத்த முயல்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
MK Stalin எழுப்பும் கேள்விகள்:
ஆளுநர்கள் மசோதாவை அனுமதிக்க காலக்கெடு இருப்பதற்கு என்ன ஆட்சோபனை இருக்க முடியும்?
மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களும் போடும் முட்டுக்கட்டையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?
பாஜக ஆளாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறதா?
"நம் நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. குடியரசுத் தலைவர் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இது மாநில சுயாட்சிக்கு தெளிவானதொரு அச்சுறுத்தல்.
இருபோன்ற கடுஞ்சூழல்களில் பாஜக அல்லாத மாநில கட்சிகளும், தலைவர்களும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் சட்டப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நம் முழு பலத்துடன் போராடுவோம்.
தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்!" எனப் பதிவிட்டுள்ளார்.