18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!
புதுச்சேரி: `கவர்னர் கைலாஷ்நாதனை மாற்றச் சொன்னார் முதல்வர் ரங்கசாமி' – நாராயணசாமி சொல்வதென்ன ?
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``பஹல்காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கேட்டதற்கு பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் தரவேண்டும். புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கிறது.

அதேபோல பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் கோரிக்கை வைத்திருப்பதுடன், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் மனு அளித்திருக்கின்றனர். இதன்மூலம் ஆளும் கட்சியினருக்கே புதுச்சேரி அரசின் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. சி.பி.ஐ விசாரணை கேட்டிருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிக்க வேண்டும்.
புதுச்சேரி உளவாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபான தொழிற்சாலையை, தமிழகப் போலீஸார் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். புதுச்சேரியில் செயல்பட்ட போலி மதுபான ஆலை விவகாரத்தில் தமிழக போலீஸாரும், கலால்துறையினரும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். ஆனால் புதுச்சேரி கலால்துறையும், காவல்துறையும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடக்கும் ஊழல்களை வைத்து மகாபாரதமே எழுதலாம்.

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுப்பார். அந்த வகையில் தற்போது மாநில அந்தஸ்து கேட்பது முதல்வர் ரங்கசாமியின் கபடநாடகம். புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், கவர்னர் கைலாஷ்நாதனை மாற்றுங்கள் என்று கேட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், முடியாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா. முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது." என்றார்.