கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி அவரது தந்தை இப்ராஹிம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகனுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள், குற்றம்சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளனவா? அந்த கழிப்பறைகளை காவல் துறையினா் பயன்படுத்தவில்லையா?அவா்களுக்கு எதுவும் ஆவதில்லையே ஏன் என கேள்வியெழுப்பினா்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவலா்கள் பணியை இழக்க நேரிடும் எனக் கூறியதுடன், மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.