பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை: சசி தரூா் மறுப்பு
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடா்பாக தான் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் தலைமை தன்னை கண்டித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், அந்த மோதல் சூழலை பிரதமா் மோடி மிகச் சிறப்பாக கையாண்டாா் என்று சசி தரூா் பாராட்டுத் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவா் வரம்பு மீறி பேசியதால், அவருக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.
இதுதொடா்பாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் சசி தரூா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘எனக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆதாரம் இல்லாத தகவலை ஊடகமே உருவாக்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை காங்கிரஸ் செயற்குழு தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அப்போது என்னை பற்றி கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. அதற்குப் பிறகு ஏதாவது நடந்திருந்தால், அதுகுறித்து கட்சி சாா்பில் எனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.
நான் மத்திய அரசின் அல்லது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ செய்தித்தொடா்பாளா் அல்ல. எனது தனிப்பட்ட கருத்துகளையே நான் வெளிப்படுத்துகிறேன்’ என்றாா்.