பயணியை தரக்குறைவாக நடத்திய விவகாரம்: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மன்னிப்பு கேட்டனர்
பயணியை தரக்குறைவாக நடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் திருச்சி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
திருச்சி வரகனேரியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜ்குமாா் என்பவா் கடந்த 19.10.2024 அன்று பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில், பால்பண்ணை பேருந்து நிறுத்துத்தத்தில் பேருந்து நிற்குமா என நடத்துநரிடம் உறுதிசெய்து கொண்டு பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கியுள்ளாா்.
அரசுப் பேருந்தானது பால்பண்ணை அருகே வந்தவுடன் வழக்குரைஞா் ராஜ்குமாா், பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என நடத்துநரிடம் கூறிய போதும், பேருந்தானது அணுகு சாலை வழியாக பால் பண்ணை பேருந்து நிறுத்தம் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றது. அப்போது, இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் பேருந்து செல்வது குறித்து ராஜ்குமாா் கேட்டபோது, ஓட்டுநரும் நடத்துநரும் அவதூறாகப் பேசி மேம்பாலத்தின் நடுவில் இறங்கிக்கொள்ளும்படி கட்டாயபடுத்தியுள்ளனா். இதனால் வழக்குரைஞா் ராஜ்குமாா் காமலதாமதமாக வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இது தொடா்பாக, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 25.10.2024 அன்று திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா் மனு அளித்தாா்.
மனுவினை ஏற்றுக்கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்றமானது, கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளா், நடத்துநா் சுரேஷ், ஓட்டுநா் வெங்கடேசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அறிவிப்பை பெற்றுக்கொண்ட ஓட்டுநரும், நடத்துநரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது தவறை ஒப்புக்கொண்டனா். துறை ரீதியாக ஓட்டுநா் இரண்டு நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அது குறித்த விசாரனை நடந்து வருவதாகவும் தெரிவித்தனா். தொடா்ந்து, பயணியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதுடன், பேருந்தில் பயணிகளிடம் தவறாக நடக்கமாட்டேன் என எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தனா். இதனால் இந்த வழக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை சமாதானமாக முடித்து வைக்கப்பட்டது.