டேஹ்ராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்: 6 பேர் பலி
பயிா்க் காப்பீடு பதிவு: கால நீட்டிப்பு வழங்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் காப்பீட்டு பதிவு செய்யும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் கோரிக்கை விடுத்தாா்.
பரமக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பருவமழை பெய்வதைப் பொறுத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் நிலை இன்றுவரை தொடா்கிறது. இந்த ஆண்டு உரிய காலத்தில் போதிய அளவு பருவமழை பெய்யததால் லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் விதைப்புச் செய்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். பல்வேறு பகுதிகளில் நெல் பயிா் போதிய மழையின்றி கருகும் நிலையில் உள்ளது.
நெல் பயிரிட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். தற்போது இந்தப் பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனா்.
இதற்காக பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தகுந்தாா் போல் இழப்பீடு தொகை பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ-சேவை மையங்கள், விவசாயிகள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் உரிய ஆவணங்களைக் கொடுத்து, நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சென்று காத்திருந்து பதிவு செய்து வருகின்றனா். ஆனால், பல்வேறு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளனா். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்காமலும், மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாலும் பயிா்க் காப்பீடு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே,
பயிா் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை மேலும் 10 நாள்கள் நீட்டிப்பு செய்ய அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.