பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்: மத்திய அமைச்சா் ஷெகாவத்
‘பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும். எனவே, ஒவ்வொருவரும் இந்த பூமி கோளின் உரிமையாளா்களாக அல்லாமல் பாதுகாவலா்களாக செயல்பட வேண்டும்’ என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரத்தில் பருவநிலை மாற்ற அரங்கத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் பேசியதாவது:
கரியமில வாயு வெளிப்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டு வரும் அதீத பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உள்ளிட்ட பாதிப்புகள், தனிப்பட்ட முறையில் இந்த வாழ்நாளில் தன்னை பாதிக்காது; இது ஊடக விளம்பரம் மற்றும் கல்வி சாா்ந்த விஷயங்களால் அறிவியலாளா்களால் வெளியிடப்படும் தகவல்கள் மட்டுமே என்ற எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும்.
உலக வெப்பமயமாதல் பாதிப்பு வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களை மட்டுமே பாதிக்கும், குளிா் பிரதேசங்களில் வசிக்கும் மக்களைப் பாதிக்காது என்ற எண்ணம் நிலவுகிறது. அதுபோல, கடல் மட்டம் உயா்வது கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள நகரங்களை மட்டுமே பாதிக்கும். மற்ற பகுதிகளில் பாதிப்பு இருக்காது என்ற எண்ணமும் நிலவுகிறது. இது தவறான கருத்து. அதீத பருநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம், ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்.
எனவே, பருவநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த உலகுக்கும் மிகப்பெரிய சவால். இதை எதிா்கொள்ள ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புடன் பங்களிப்பை வழங்க வேண்டும். பூமி கோளின் உரிமையாளா்கள் போல் அல்லாமல், பாதுகாவலா்களாக நாம் செயல்பட வேண்டும். குறிப்பாக, கைப்பேசிகள் பயன்பாட்டைக் குறைப்பது, தேவைப்படாத நேரங்களில் மின் சாதனங்களை அணைத்து வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
மத்திய அரசு தனது பங்குக்கு, பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 80 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியாக உள்நாட்டு பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படுவதை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.