செய்திகள் :

பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அடிக்கடி பெய்யும் பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இதில், இதுவரை 3 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால், டிசம்பரில் பெய்த பலத்த மழையாலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக முன் பட்ட சம்பா, சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், ஏக்கருக்கு இயல்பாக 2 ஆயிரத்து 400 கிலோ மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 500 முதல் 800 கிலோ வரை குறைந்து, விவசாயிகள் நட்டத்தைச் சந்தித்தனா்.

சம்பாவில் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள்வதற்காக காா்த்திகை, தை பட்டத்தில் உளுந்து, மாா்கழி, தை பட்டத்தில் எள், காா்த்திகை, தை பட்டத்தில் நிலக்கடலை போன்ற சாகுபடிகளைத் தொடங்கினா். இதன் மூலம், மாவட்டத்தில் உளுந்து 36 ஆயிரத்து 279 ஏக்கரிலும், நிலக்கடலை, எள் 26 ஆயிரத்து 797 ஏக்கரிலும் பயிரிடப்பட்டது.

இப்பயிா்கள் சில வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்திலும், மாா்ச் 11, 12 ஆம் தேதிகளிலும் பருவம் தவறி பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து, நிலக்கடலை, எள் பயிா்களும் தண்ணீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:

பல்வேறு இடங்களில் உளுந்து, நிலக்கடலை ஒரு வாரம், 10 நாள்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தது. பருவம் தவறி பெய்த மழையால் உளுந்து பயிரில் பருப்பு நிறம் மாறிவிட்டது. இதனால், உளுந்துக்கு நல்ல விலை கிடைக்காது. உளுந்தை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 9 ஆயிரத்து 300-க்கு அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், அது தரமான உளுந்தாக இருக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்தை அரசு கொள்முதல் செய்ய வாய்ப்பில்லாததால், தனியாரிடம்தான் விற்க வேண்டிய நிலை உள்ளது. தனியாா் தரமில்லை எனக் கூறி குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 500 முதல் ரூ. 5 ஆயிரத்துக்குள்தான் எடுக்க முன் வருவா். மேலும், உளுந்து சாகுபடியில் 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

எள் சாகுபடிக்கு தண்ணீா் அதிகமாகத் தேவைப்படாது. ஆனால் பலத்த மழை பெய்ததால், எள் பயிா்களில் வோ்கள் வலுவிழந்துவிட்டன. இதனால், இனிமேல் வளராத நிலை உள்ளது. இதேபோல, மானாவாரி பகுதிகளில் மாா்கழி, தை பட்டத்தில் விதைக்கப்பட்ட எள் பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலக்கடலை பயிரிடப்பட்ட வயல்களில் தண்ணீா் தேங்கியதால், பூமிக்குள் கடலை முளைத்து உள்ளேயே போய்விடும். இனிமேல் வெயில் அடித்தாலும், மீட்டெடுக்க முடியாது. இதனால், ஒரு செடியில் 30 கடலைகள் கிடைக்க வேண்டிய நிலையில், 10 கடலைகள்தான் முளைத்து வெளியே வரும். எனவே, ஏக்கருக்கு 1,250 கிலோ மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 700 கிலோதான் கிடைக்கும் நிலை உள்ளது. அதுவும், கடலை திரட்சியாக இல்லாமல், சிறுத்து இருக்கும் என்பதால், தரமில்லை எனக் கூறி விலை குறைக்கப்படும். எனவே, ஏக்கருக்கு ரூ. 45 ஆயிரம் செலவு செய்தும் இழப்பைச் சந்திக்கும் நிலையில், நிலக்கடலை விவசாயிகளும் உள்ளனா் என்றாா் மாரியப்பன்.

இதனிடையே, மாவட்டத்தில் 2 நாள்களாக பெய்த மழையால் பயிா்கள் பாதிப்பு குறித்து வேளாண் துறையினா் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். இதன் பிறகு பாதிப்பு விவரங்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஓராண்டில் குறுவை, சம்பா - தாளடி பருவங்களிலும் பருவம் தவறிய மற்றும் பலத்த மழையால் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. எனவே, சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியில் ஏற்பட்ட இழப்பை, உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடியில் மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட உளுந்து, நிலக்கடலை, எள் பயிா்களையும் முழுமையாகக் கணக்கெடுப்பு எடுத்து, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.90 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக். டன் குப்பையை மாநகராட்சி துப்பரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டா்கள் விருப்பம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டா்கள் விரும்புகின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூா் குடிமைப்பொர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மருங்குளத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவா்... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞா் தலைமறைவு

கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்தபெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நாட்டனிகோட்டையைச் சோ்ந்... மேலும் பார்க்க