பல் செட், கண்ணாடி இல்லை, டெக்னாலஜி அப்டேட், ஆங்கிலப் புலமை: 100 வயது ஆச்சர்ய மனுஷி சீதாலட்சுமி
திருப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பயணம்தான் வாழ்க்கை. அந்தப் பயணத்தில், நமக்கு வழிகாட்டவும், தடுமாறும்போது தாங்கிப் பிடிக்கவும், அனுபவங்களின் மூலம் ஆலோசனைகள் சொல்லவும் பெற்றோர் பக்கத்தில் இருப்பதென்பது ஒப்பற்ற வரம். அதீத அன்பையும் தன்னலமற்ற தியாகத்தையும் மட்டுமே பகிரத் தெரிந்த உறவும் அதுதான். இருக்கும் போதே அந்த உறவை மதிக்கிறோமா, கொண்டாடு கிறோமா என்பது அவரவர் தன்னை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்வி.
இந்த வருடம், செப்டம்பர் 1-ம் தேதி 100 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் சீதாலட்சுமி மாணிக்கத்தை மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் எல பலரும் ஒன்றுகூடி விழா எடுத்துக் கொண்டாடி இருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்த சீதாலட்சுமி யார் தெரியுமா... சின்னத்திரை பிரபலமும், கல்வியாளருமான ரமேஷ் பிரபாவின் அம்மா. நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ‘அம்மா 100’ என்ற தலைப்பில், மகன்களும் மகள்களும் இணைந்து ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீத், சக்தி மசாலா நிறுவன அதிபர்கள் பி. சி. துரைசாமி - சாந்தி துரைசாமி, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உறவுகளும் நட்பும் சூழ, பாசமழையில் திளைத்துப் போயிருந்த சீதாலட்சுமியிடம் அவர் கடந்து வந்த பாதை குறித்துப் பேசினோம்...
“1926-ம் ஆண்டு. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிக்கதம்பூர் பாளையம் கிராமத்தில் பிறந்தேன். 1949-ம் ஆண்டு திருமணமாகி, என் கணவர் ஊரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தில் குடி புகுந்தேன். எங்களுக்கு நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் என மொத்தம் எட்டு பிள்ளைகள். இவர்களில் ஏழு குழந்தைகளை வீட்டிலேயே பெற்றெடுத் தேன். எட்டாவது பிரசவத்துக்கு மட்டும்தான் மருத்துவமனைக்குச் சென்றேன்.
திருமணம் ஆகி வந்தபோது என் கணவர் குடும்பம், விவசாயம், மாட்டுப்பண்ணை என மிகவும் வசதியாக இருந்தது. இடையில் சில காலம் பொருளாதாரரீதியாக எங்கள் குடும்பம் பின்னடைந்தது. அப்போது தாலி உள்பட என் நகைகளை அடகு வைத்துதான் படிக்க வைத்தேன். நான் செய்த மிகப் பெரிய நல்ல காரியம், என் பிள்ளைகளைப் படிக்க வைத்தது தான். இன்றைக்கு என் பிள்ளைகள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது, அன்று நான் பட்ட கஷ்டம் பெரிதாகத் தெரிய வில்லை...’’
- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறார் இந்தத் தாய்.
பிள்ளைகள் அனைவரும் வசதியாக இருக்கும் நிலையிலும், வயதான காலத்தில் அவர்களைச் சார்ந்திருப்பதையோ, அவர்களின் நிழலில் இருப்பதையோ விரும்பாத வைராக்கிய மனுஷி யாக இருக்கிறார் சீதாலட்சுமி.
‘`பெரம்பலூரில் நான் தனியாகத்தான் இருக்கிறேன். தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா, பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளின் போதும், விடுமுறை தினங்களிலும், பிள்ளைகளும், பேரன் - பேத்திகளும் வந்துபோவதால், எனக்கு தனியாக இருக்கிறோம் என்கிற உணர்வு ஏற்படுவதில்லை. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா என பல வெளிநாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஆனாலும், சொந்த கிராமத்தில், சொந்த வீட்டில் இருப்பது போன்ற நிம்மதி வேறு எங்கும் கிடைக்கவில்லை...’’
- `சொர்க்கமே என்றாலும்...’ மொமென்ட் பகிர்பவர், 100 வயதை எட்டிய நிலையிலும் எனர்ஜி குறையாமல் வியக்கவைக்கிறார்.
‘`அதிகாலையில் எழுந்திருப்பது, குளிப்பது, பூஜை செய்வது, சமைப்பது, சரியான நேரத் துக்குச் சாப்பிடுவது, திண்ணையில் அமர்ந்து ஊர் மக்களோடு பேசிக்கொண்டிருப்பது, தொலைக்காட்சியில் செய்திகள், சீரியல் மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது, கோயில்களுக்குச் செல்வது என எப்போதும் பிசியாகவே இருக்கிறேன். வீட்டிலேயே பெரிய தோட்டம் வைத்திருக்கிறேன். அதைப் பராமரிப்பதும், பூ கட்டுவதும், காய்கள் பறித்து பிறருக்கு வழங்குவதும் எனக்கு நிறைவு தரும் விஷயங்கள். எங்கள் வீட்டில் காலங்காலமாக மாமரமும், கறிவேப்பிலை மரமும் இருக்கின்றன. இவை இரண்டும் உறவை வளர்க்கும் மரங்கள். ஊரில் நல்லது, கெட்டதுக்கு மாவிலை தேவைப் படும்போது எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அதேபோல் கறிவேப்பிலையையும் அடிக்கடி கேட்பார்கள். அவர்கள் எனக்கு வேர்க்கடலை, புளிச்சகீரை, காய்கறிகள், பழங்கள் கொண்டு வந்து தருவார்கள். அப்படி வருபவர்களிடம் குடும்பத்து விஷயங்களை பரஸ்பரம் பேசிக் கொண்டு அன்பை பரிமாறிக் கொள்வோம்...’’
- அன்பிலும் அணுகுமுறையிலும் அந்தக் காலத்து மனுஷி என்பதை நிரூபிக்கிறார் சீதாலட்சுமி.
கட்டுப்பாடான உணவு, குறிப்பாக, சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறார். இந்த வயதிலும் செயற்கை பற்கள் இல்லை. கண்ணாடி இல்லாமல் வாசிக்கிறார். கிராமத்து தூய காற்றும், உளைச்சல் இல்லாத மனமும், அளவான உணவும், அன்பான மனிதர்களும்தான் தன் ஆரோக்கியத்தின் ரகசியங்கள் என்கிறார்.
டெக்னாலஜியிலும் கில்லியாக இருக்கிறார் சீதாலட்சுமி பாட்டி. ஸ்மார்ட்போன், ஐ பேட் பயன்படுத்துகிறார். தினமும் பிள்ளைகள், பேரன், பேத்திகளோடு தொலைபேசியிலும், வீடியோ காலிலும் பேசுகிறார். பாட்டியின் பேச்சில் ஆங்கில வார்த்தைகள் சரளமாகப் புழங்குவது மற்றோர் ஆச்சர்யம். மேலப்புலியூர் கிராமத்தில் வசிப்பவர்களில் 100 வயதைத் தொட்ட ஒரே நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டாம்.
‘`வயதை பற்றி நான் நினைப்பதே இல்லை. என் பிள்ளைகள் எல்லாம் ஒற்றுமையாக இருப்பதைப் பார்ப்பதுதான் எனக்குத் தெம்பை யும் தைரியத்தையும் கொடுக்கிறது. அதுவே இன்னும் நூறு ஆண்டுகள் கூட என்னை வாழ வைக்கும்’’ என்று சிரிக்கிறார்.
வாழ்வாங்கு வாழுங்கள்!