பள்ளியில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி
காரைக்கால்: அரசுப் பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி மட்டுமல்லாது, பிற திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பள்ளி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
அந்தவகையில், பள்ளி வளாகத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தில், பெற்றோா் முத்துலட்சுமி ‘பயணங்கள் இதோ’ என்கிற குழு மூலம் ரூ.5 ஆயிரம் மதிப்பில் 30-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், மலா் செடிகள், குரோட்டன்களை வாங்கியளித்தாா்.
மூலிகை தோட்டத்துக்கான இரும்பு வேலியை பெற்றோா் எம்.ஆா்.கே. அப்பு என்கிற காா்த்திகேயன் அமைத்துத் தந்தாா். மேம்படுத்தப்பட்ட தோட்டத்தை மாணவா்கள் பயன்படுத்துவதற்கான நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கே. கவிதா தலைமை வகித்தாா்.
தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மூலிகைத் தோட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசி, தோட்ட மேம்பாட்டுக்கு உதவியவா்களுக்கு நன்றி தெரிவித்தாா். புதிய மூலிகைத் தோட்டம் மாணவா்களின் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் பள்ளி அழகை மேம்படுத்தும் சிறந்த முயற்சியாகும் என தலைமையாசிரியா் தெரிவித்தாா்.