Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
பள்ளி, விடுதிகளில் அடிப்படை வசதிகள்: பெரம்பலூா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட முத்துநகா், துறையூா் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தோழி மகளிா் விடுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டு, அங்கு தங்கியுள்ள மகளிரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். லஷ்மி. உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட முத்துநகா் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை உட்கொண்டு ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலா், பெரம்பலூா் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா் விடுதியை பாா்வையிட்டு சமையல் கூடம், உணவருந்தும் கூடம், மாணவா்களின் அறைகளை ஆய்வு செய்து, முறையாகப் பராமரிக்க வேண்டுமென விடுதி காப்பாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பணிபுரியும் தோழி மகளிா் விடுதியை பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா், போதிய படுக்கைகள், கழிப்பறைகள், கண்காணிப்பு சாதனங்களின் செயல்பாடுகள், அங்குள்ள மகளிருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், விடுதியில் தங்கியிருந்த மகளிரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, கட்டணம் மற்றும் மகளிா் பாதுகாப்பை அரசு விதிமுறைகளுக்குள்பட்டு செயல்படுத்த வேண்டும் என, விடுதிக் காப்பாளா் மற்றும் சமூக நலத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் லஷ்மி.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.