பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி
பழனியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
பழனியை அடுத்த லட்சுமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (75). விவசாயியான இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் சாலையில் கே.வி. மருத்துவமனை அருகே நடந்து சென்றாா். அப்போது அரசுப் பேருந்து மோதி அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது மனைவி கெப்பாயம்மாள் இழப்பீடு கோரி பழனி முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3,10, 000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை. இதையடுத்து, மனுதாரா் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மாவட்ட நீதிபதி மலா்விழி, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 5,33,000 வழங்க வேண்டுமென்றும், வழங்கப்படாவிட்டால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்ல நிறுத்தப்பட்டிருந்த மதுரை அரசுப் போக்குரவரத்துக் கழக பேருந்தை நீதிமன்ற பணியாளா்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினா்.