பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியது:
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவு 58.75 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் பக்தர்களுக்கான தங்கும் அறைகள், பொருள்கள் பாதுகாப்பு அறை, உணவகங்கள், பூங்காக்கள், முடிகாணிக்கை மண்டபம், நீரூற்றுகள், சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா, முருகனின் பெருமைகளை பறைசாற்றும் ஆன்மிக அருங்காட்சியகம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமைந்திட வேண்டும்.
அதற்கேற்றவாறு வடிவமைப்புகளை உருவாக்கி திட்டமதிப்பீட்டை விரைந்து தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.