தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் காஜா ஆசிஃப் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியா, சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் நல்ல தீா்வு கிடைக்கும்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை தொடா்புபடுத்தி இந்திய பிரதமா் மோடி கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை தெரிந்துகொள்ள மேற்கூறிய நாடுகள் விசாரணை குழு ஒன்றை அமைக்கலாம்.
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபும் இந்த விவகாரத்தில் சா்வதேச விசாரணை தேவை என்ற கருத்தையே வலியுறுத்துகிறாா்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தொடா்புபடுத்துவதற்கு சிறிய ஆதாரமாவது இருக்க வேண்டும். வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்றாா்.
முன்னதாக, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவா்கள் சுதந்திர போராட்ட வீரா்களாக இருக்கலாம் என பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் கடந்த 22-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். அதன் பிறகு இச்சம்வத்துக்கு பாகிஸ்தான் காரணமில்லை எனக் கூறி இந்தியாவை காஜா ஆசிஃப் விமா்சனம் செய்தாா்.
இவா்கள் இருவரின் கூற்றுகளை ஒப்பிட்டு ரஷியாவில் வசித்து வரும் அமெரிக்க அரசியல் நிபுணரான ஆண்ட்ரூ கோரிப்கோ, ‘முதலில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதைப் போன்ற கருத்தை கடந்த 22-ஆம் தேதி இசாக் தாா் கூறினாா். அதன் பிறகு அதை மறுக்கும் வகையில் காஜா ஆசிஃப் தற்போது இந்தியா மீது பழிபோட்டு வருகிறாா்.
இருவரின் கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைப் பாா்க்கும்போது தங்கள் மீதான குற்றத்தை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.