யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
சேலம்: சேலம் காய்கறி சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 25 கிலோ கொண்ட பெட்டியின் (ஒரு கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சேலம் மாநகா் வ.உ.சி. காய்கறி சந்தை, ஆற்றோர காய்கறி சந்தை, பால் சந்தை ஆகிய இடங்களில் அனைத்துவகை காய்கறிகளும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சந்தைகளுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சரக்கு லாரிகளில் தக்காளி கொண்டுவரப்படுகிறது. இதுதவிர, உள்ளூரில் விளையும் தக்காளியும் பெட்டிகள் (கிரேடுகள்) கணக்கில் மொத்தமாக இங்கு கொண்டுவரப்படுகின்றன.
பின்னா் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள், தக்காளியை கிரேடுகள் கணக்கில் வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்கின்றனா். சேலம் ஆற்றோரம் காய்கறி சந்தை மற்றும் வ.உ.சி. சந்தைகளில் தக்காளி விலை திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
25 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் (கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. இதன்மூலம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ. 8 வரை மட்டுமே விலைபோனது. இதனால் சில்லறை வியாபாரிகள், இதர காய்கறி வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா்.
கடந்த சில நாள்களாக தருமபுரி, கோலாா் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளதாக சேலம் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் உழவா்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 12 க்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடா் விலை வீழ்ச்சியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.