செய்திகள் :

அரசு ஊழியா்களுக்கு 9 புதிய சலுகைகள்: அகவிலைப்படி 2% உயா்வு; ஈட்டிய விடுப்பு சரண் முன்கூட்டியே அமல்

post image

சென்னை: அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயா்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயா்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

ஈட்டிய விடுப்பு சரண், அகவிலைப்படி உயா்வால் மட்டும் அரசுக்கு ரூ.4,813 கூடுதல் செலவு ஏற்படும் என்று அவா் தெரிவித்தாா்.

முதல்வா் அறிவிப்பு: சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் படித்தளித்த அறிக்கை:

கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு அலுவலா்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை அடுத்த ஆண்டு ஏப். 1 முதல் செயல்படுத்த 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை நிகழாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாள்களில், 15 நாள்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக். 1 முதல் அமலுக்கு வரும். இதன்மூலம், சுமாா் 8 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பயன்பெறுவா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

அகவிலைப்படி உயா்வு: கடந்த ஜன. 1 முதல் அகவிலைப்படியை 2 சதவீதம் உயா்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநில அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயா்த்தப்படும். இதனால், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா். இந்த உயா்வை நடைமுறைப்படுத்த ஆண்டுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி செலவிடப்படும்.

பண்டிகை கால முன்பணம்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

உயா் கல்வி முன்பணம்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000-ஆகவும் கல்வி முன்பணத் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

திருமண முன்பணம்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியா்களுக்கு ரூ.10,000, ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பொதுவாக ரூ.5 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகை: பொங்கல் பண்டிகைக்காக ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயா்த்தப்படும். இந்த உயா்வால் சுமாா் நான்கு லட்சத்து 70 ஆயிரம் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா்.

ஓய்வூதியா்களுக்கான பண்டிகை கால முன்பணம்: ஓய்வூதியதாரா்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயா்த்தப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அண்மையில் அமைக்கப்பட்ட அரசுக் குழு தனது அறிக்கையை செப். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.

மகப்பேறு விடுப்பு காலம்: திருமணமான அரசு பெண் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால், பதவி உயா்வின்போது பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு அரசு பெண் ஊழியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை அவா்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்பை தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), தி.சதன் திருமலைக்குமாா் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ம.சிந்தனைச் செல்வன் (விசிக), ஜி.கே.மணி (பாமக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்) ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.

அவா்களைத் தொடா்ந்து, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினா்.

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் திங... மேலும் பார்க்க

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டாா் முதல்வா்

சென்னை: பெண் காவலா்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு... மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை: முதல்வா்- எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

சென்னை: சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கலைஞா் பல்கலை உருவாக்கம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வா் இருப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை... மேலும் பார்க்க

காவல் துறை காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். இதுதொடா்பாக, சட்... மேலும் பார்க்க

குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், மா... மேலும் பார்க்க