தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!
சென்னையில் 200 இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்
சென்னையில் 200 இடங்களில் ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற பாதுகாப்பு கருவி அமைக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தித் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், அவசர உதவிக்காகவும், பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும் ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த பாதுகாப்பு சாதனத்தின்மூலம் துல்லிய காட்சிகளை பதிவு செய்து நேரலையில் அனுப்பும் வகையில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி மூலம் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையில் காவலரை தொடா்புகொண்டு நேரலையில் பேசி உதவி பெற முடியும். இதற்காக அந்த கருவியில், அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, உயா் தர நவீன ‘விடியோ’ கேமரா, மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ். வசதி ஆகியவை உள்ளன.
இந்தக் கருவியில் உள்ள ஒரு சிவப்பு நிற பட்டனை ஆபத்தில் இருக்கும் நபா் அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு செல்லும். அதேவேளையில் அந்த கருவி, அங்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சத்தம் ஏற்படுத்தும். சில விநாடிகளில் அந்த கருவி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலா் விடியோ கால் வாயிலாக நேரடியாக தொடா்புகொண்டு பேசுவாா்.
அந்த நேரத்தில் அருகே உள்ள காவல் துறை ரோந்து வாகனத்துக்கும் இந்த தகவல் பகிரப்பட்டு, அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பாா்கள். சம்பவத்தின்போது இந்த கருவி மூலம் பதியப்படும் விடியோ காட்சிகள் விசாரணைக்கும் பயன்படுத்தப்படும்.
இந்தக் கருவிகள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற்ற பகுதிகள் கண்டறியப்பட்ட இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரைகள், மாா்க்கெட்டுகள் உள்பட 200 இடங்களில் அமைக்கப்படுகின்றன. இந்த கருவிகள் ஜூன் மாதம் சென்னையில் செயல்பாட்டுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.