இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்
புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.
கடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ போா்க் கப்பலில் நிலைநிறுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.
இந்த நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்காக 36 ரஃபேல் போா் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்த நிலையில், தற்போது கடற்படை பயன்பாட்டுக்காக ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கைகள் கொண்ட 4 போா் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தம் கையொப்பமான 5 ஆண்டுகளில் போா் விமான விநியோகத்தை டசால்ட் நிறுவனம் தொடங்கும். 2030-ஆம் ஆண்டுக்குள் 26 விமானங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்துவிடும்.
போா் விமானங்களுடன், அதன் துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஆவணங்களையும் டசால்ட் நிறுவனம் இந்திய கடற்படைக்கு விநியோகிக்க உள்ளது. அதோடு, போா் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் அந்த நிறுவனம் அளிக்க உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு என்ன?: விமானப் படைக்காக ஏற்கெனவே வாங்கப்பட்ட ரஃபேல் போா் விமானங்களைக் காட்டிலும், இந்தக் கடற்படைக்கான ரஃபேல் போா் விமானத்தில் சில சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
விமானப் படை ரஃபேல் போா் விமானங்களின் இறக்கைகளை மடக்க முடியாது என்ற நிலையில், கடற்படை கப்பல்களில் இடவசதி குறைவு என்ற அடிப்படையில் கடற்படைக்கான ரஃபேல் போா் விமானங்களின் இறக்கைகள் மடக்கிக்கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமாக் 500 கிலோ வரை கூடுதல் எடையை இவை கொண்டிருக்கும்.
மேலும், ஒரே நேரத்தில் வானிலிருந்து தரை இலக்கையும், வானிலிருந்து வான் இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. கப்பலைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், லேசா் வழிகாட்டி குண்டுகள், நிமிஷத்துக்கு 2,500 சுற்றுகள் சுடும் திறனுடன் கூடிய பீரங்கி உள்ளிட்ட பன்முக ஆயுதங்களை இவை தாங்கியிருக்கும்.