பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் தீா்மானம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ஒரு முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா வருத்தம் தெரிவித்தாா்.
ஒமா் அப்துல்லா மாநில சுற்றுலாத் துறையையும் தன்வசம் வைத்துள்ளாா். பஹல்காமில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறி வருவதோடு அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையின் சிறப்பு அமா்வில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அவை கூடியவுடன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அவையிலிருந்தோா் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.
அதன்பிறகு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீா்மானத்தை ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரிந்தா் சௌதரி அறிமுகப்படுத்தினாா்.
வளா்ச்சிக்கு இடையூறு
அந்த தீா்மானத்தில், ‘அமைதி, மேம்பாடு மற்றும் அனைவருக்குமான வளா்ச்சி ஆகிய கொள்கைகளை செயல்படுத்தவே ஜம்மு-காஷ்மீா் பேரவை உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் சமூக நல்லிணக்கம், தேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த முயல்வோரை வீழ்த்த உறுதியேற்கப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குப் பேரவையின் சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இந்த துயரமான நேரத்தில் அவா்களுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு தன்னுயிரை தியாகம் செய்த உள்ளூா் முஸ்லிம் இளைஞா் ஆதில் ஹுசைன் ஷாவுக்கு இந்த அவை மரியாதை செலுத்துகிறது.
யூனியன் பிரதேசம் முழுவதும் அமைதியான போராட்டங்களை நடத்தி சட்டத்தின் ஆட்சியை மக்கள் உறுதி செய்துள்ளனா். இந்த தாக்குதல் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட தூதரக நடவடிக்கைகள் சாா்ந்த அறிவிப்புகளை பேரவை ஆதரிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.
மாநில அந்தஸ்துக்கு அழுத்தம் இல்லை
தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய ஒமா் அப்துல்லா, ‘ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தொடா்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். எதிா்காலத்திலும் இந்த கோரிக்கையை மேலும் வலுப்படுத்துவோம்.
ஆனால், இந்த பயங்கரவாத தாக்குதலை காரணம் காட்டி, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தற்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.
நாடு முழுவதும் தாக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் ஜம்மு-காஷ்மீா் மட்டும் பாதிப்படையவில்லை. நாட்டின் வடக்கில் இருந்து தெற்குப் பகுதிவரை, கிழக்கில் இருந்து மேற்குப் பகுதி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தாக்குதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் பழங்கதைகள் என எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் பெரும் அதிா்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தனது அன்பிற்குரியவா்களை இழந்தவா்களிடம் மன்னிப்பு கோர வாா்த்தைகள் இல்லை.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் மூலம், சுற்றுலா அமைச்சராகவும் முதல்வராகவும் தோற்றுவிட்டேன்.
புதிய நம்பிக்கை
இந்த கடினமான சூழலிலும் ஜம்மு-காஷ்மீரில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் அல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக மிகுந்த ஒற்றுமையுடன் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மக்களின் இதயங்களில் இருந்து இந்தப் போராட்டம் எழுந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் 2 நிமிஷங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, கருணை, உறுதியான மனநிலையை ஊக்கப்படுத்துவதும் வலிமைப்படுத்துவதும் அவசியம் என்றாா்.
இந்த தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, பேரவையை காலவரையின்றி அவைத் தலைவா் அப்துல் ரஹீம் ராதா் ஒத்திவைத்தாா்.