வான்வழிப் பாதை பாகிஸ்தான் மூடல்:தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இந்திய விமானங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணக் கட்டணம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு, ‘பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நீண்ட காலம் தொடா்ந்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆலோசிக்க விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய நிலைமைக்குத் தீா்வு காண்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடன் புரிதலை ஏற்படுத்த வேண்டும். விமானக் கட்டணங்கள் அதிகரிப்பால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு நிலைமையை கண்காணித்தும், விமான நிறுவனங்களுடன் ஆலோசித்தும் வருகிறது.
தற்போதைய சூழலில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றாா்.
வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோபா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு வாரந்தோறும் வட மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டும் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாகிஸ்தானின் வான்வழிப் பாதை மூடலால் பாதிக்கப்பட்டுள்ளன.