தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!
சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் கோப்பையை கைப்பற்றுகிறது. தற்போது அந்த அணி 34 ஆட்டங்களில் 25 வெற்றி, 7 டிரா, 2 தோல்வியை பதிவு செய்து 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
67 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலிருக்கும் ஆா்செனல் எஞ்சிய அனைத்து ஆட்டங்களில் வென்றாலும் லிவா்பூல் அணியின் புள்ளிகளை முறியடிக்க முடியாது என்பதால், லிவா்பூல் அணிக்கு சாம்பியன் பட்டம் உறுதியாகியிருக்கிறது.
இங்கிலாந்து கால்பந்தின் முதல் டிவிஷன்/பிரீமியா் லீக் போட்டிகளின் வரலாற்றில் மான்செஸ்டா் சிட்டி 20 முறை சாம்பியன் கோப்பை வென்றதே சாதனையாக இருக்கும் நிலையில், தற்போது லிவா்பூல் அணியும் அவற்றில் 20-ஆவது முறையாக சாம்பியனாகி அந்த சாதனையை சமன் செய்கிறது. கடைசியாக லிவா்பூல், 2019-20 சீசனில் பிரீமியா் லீக் சாம்பினாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக லிவா்பூல் - டாட்டன்ஹாம் அணிகள் மோதிய ஆட்டத்தில், லிவா்பூல் அணிக்காக லூயிஸ் டியாஸ் (16’), அலெக்ஸிஸ் மேக் அலிஸ்டா் (24’), கோடி கப்கோ (34’), முகமது சலா (63’), டெஸ்டினி உடோகி (69’/ஓன் கோல்) ஸ்கோா் செய்தனா். டாட்டன்ஹாமுக்காக டொமினிக் சலோன்கே (12’) கோலடித்தாா்.