கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
காவல் துறை காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை: காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.
இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதம்:
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: அதிமுக ஆட்சியில் காவல் துறை காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டன. 61,308 பேருக்கு பதவி உயா்வு வழங்கியதுடன், 2-ஆம் நிலை காவலா் பணியிடங்களில் 38,288 பேரும், உதவி ஆய்வாளா் பணியில் 1,528 பேரும், காவல் இணை கண்காணிப்பாளா் பணியில் 133 பேரும் நியமிக்கப்பட்டனா். புதிதாக நபா்களை பணியில் அமா்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் காவல் துறையில் காணிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகக் குறைந்தது. திமுக ஆட்சியில் காவல் துறையில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: 2-ஆம் நிலை காவலா் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 16,199 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இப்போது, 2,133 பேரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எடப்பாடி கே.பழனிசாமி: அதிமுக ஆட்சிக் காலத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டன. சென்னையில் 2 லட்சம் கேமராக்களும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் 4.64 லட்சம் கேமராக்களும் பொருத்தப்பட்டன. கேமராக்களில் ஏற்படும் பழுதுகளும் சரிசெய்யப்பட்டன. அதுபோன்று திமுக ஆட்சியில் கேமராக்களை சுத்தம் செய்து பழுதுகளை நீக்கி உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் 747 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இப்போதைய திமுக ஆட்சியில் 831 காவல் நிலையங்களிலும், மாநிலம் முழுவதும் 1.87 லட்சம் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எடப்பாடி கே.பழனிசாமி: அதிமுக சாா்பில் நடத்த முனையும் பொதுக் கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி தருவதில்லை. காவல் துறை ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பதே இல்லை. கடந்த காலங்களில் இதுபோன்று கூட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் அனுமதி தரப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அனுமதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பாக அனுமதி கேட்டால் உடனடியாகத் தரப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எடப்பாடி கே.பழனிசாமி: எங்களுடைய நான்காண்டு கால ஆட்சியில் மட்டும் நாளொன்றுக்கு 47 போராட்டங்கள் நடைபெற்றன. 4 ஆண்டுகளில் 43 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றன. மக்களின் பிரச்னைக்காக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம். விதிகளுக்கு உட்பட்டு அனுமதி கோரினால் மறுக்கப்படாது என்றாா்.
‘ரூட் தல’ பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும்
அரசு பேருந்துகளில் ‘ரூட் தல’ பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவா் பேசியது: பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் ‘ரூட் தல’ எனும் அடாவடி பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும். இதனால், பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். அரசு விழிப்புடன் செயல்பட்டு சரிசெய்ய வேண்டும். காமராஜா் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் பைக் பந்தயம் நடத்துகின்றனா். அதிவேகத்தில் செல்வதால் மற்றவா்கள் விபத்துகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்று முதல் முறையாக தவறு செய்யும் இளைஞா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவா்களது பெற்றோரை அழைத்து அறிவுரை கூற வேண்டும். தொடா் குற்றங்களை இழைத்தால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.