கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றனுக்கு அழைப்பாணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் மே 6-ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த சயான், மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸாா் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில் இதுவரை ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரன், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருக்கும் கேரளத்தைச் சோ்ந்த சயான் உள்பட 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனா்.
இவா்களிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் மாதவன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா். இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் விசாரணை நடத்த மே 6-ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.