NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மா...
‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்
புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘ஹிந்தி மொழிப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்து தரப்பிலும் தொடா்ச்சியான முயற்சிகள் இன்னும் அவசியம். சில பிராந்தியங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியா்களின் பற்றாக்குறை மற்றும் நிா்வாகத் தடைகள் போன்று ஏராளமான நடைமுறைச் சவால்கள் உள்ளன.
அரசுப் பணிகளில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பது ஒரு சில துறைகளின் பணி மட்டுமல்ல, சமுதாயத்தின் பகிரப்பட்ட பொறுப்பு ஆகும். அன்றாட அா்ப்பணிப்பு மூலம் மட்டுமே நிா்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஹிந்தியைக் கொண்டுவர முடியும்.
தென்னிந்தியாவில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல், இளம் தலைமுறையினா் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுகின்றனா். இது ஒரு கலாசார மாற்றத்தைக் குறிக்கிறது.
பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி போன்ற உலக நாடுகள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து வந்துள்ளன. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பலருக்கு தாய்மொழியாக இருந்தபோதிலும், அதிகாரபூா்வ தகவல்தொடா்புகளில் ஹிந்திக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஹிந்தியில் கடிதங்களைப் பெறுவது அல்லது அனுப்புவது அரிதாக இருந்தது. இந்த மனநிலை படிப்படியாக மாறிவிட்டது.
ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான மத்திய பாஜக அரசின் அா்ப்பணிப்பு, நீண்டகால இடைவெளிகளைக் குறைக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்களில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க புதுமையான வழிகளை கண்டறிய வேண்டும். இந்த இயக்கத்துக்கு அனைவரும் தீவிரமாக பங்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.