காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெரும் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பல குற்றவியல் மற்றும் பண முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த பண முறைகேடு வழக்கும் ஒன்று.
இந்நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காமன்வெல்த் விளையாட்டு தொடா்பான சிபிஐயின் ஊழல் வழக்கு ஏற்கெனவே முடித்துவைக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டாா்.
சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோா் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சஞ்சீவ் அகா்வால், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டாா்.
‘மோடி, கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்’: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா், காங்கிரஸை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமா் மோடியும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் ஜோடித்தனா்.
2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. தற்போது காமன்வெல்த் ஊழல் தொடா்பான வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.