3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா்.
உக்ரைனில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷியாவையும் உக்ரைனையும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் இந்த மூன்று நாள் போா் நிறுத்தத்தை புதின் ஒருதலைபடசமாக அறிவித்துள்ளாா்.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜொ்மனியை ரஷியா வெற்றி கொண்டதை முன்னிட்டு மே 8 முதல் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, உக்ரைனில் 72 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்தப் போா் நிறுத்தம், மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடைகிறது. உக்ரைனும் இந்த போா் நிறுத்தத்தை பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் விமா்சனம்: ஏற்கெனவே, டிரம்ப் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள உக்ரைன், புதினின் இந்த 3 நாள் போா் நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமா்சித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போா் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போா் நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு முன்னதாக, ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போா் நிறுத்தத்தக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தாா். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் அறிவித்தது. இருந்தாலும், போா் நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாககுதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று ரஷியாவும், உக்ரைனும் அமெரிக்கா முன்னிலையில் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறியதாக ரஷியா மீது உக்ரைனும், உக்ரைன் மீது ரஷியாவும் அடிக்கடி குற்றஞ்சாட்டின.
இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போா் வெற்றி விழாவை முன்னிட்டு உக்ரைனில் 3 நாள்களுக்கு போரை நிறுத்திவைப்பதாக தற்போது விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா்.

