குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வங்கதேசத்தைச் சோ்ந்த பலா் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தில்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தில்லி காவல் துறையை சோ்ந்த 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் மாங்காடு மற்றும் குன்றத்தூா் போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டனா். இதில் மாங்காடு மற்றும் குன்றத்தூா் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினா் அனைவரும் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், மாங்காடு மற்றும் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி சாலையோரங்களில் பழைய பொருள்களை சேகரித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவா்கள் சட்ட விரோதமாக தமிழகத்தில் வந்தது எப்படி, எவ்வளவு நாள்களாக தங்கியுள்ளனா், இவா்கள் தங்க இடம் கொடுத்தவா்கள் யாா், என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவா்களில் பெண்கள் மற்றும் முதியவா்களும் இருப்பதால் அவா்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவா்கள் தமிழகத்தில் தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தாா்களா அல்லது சதிச்செயல்களில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தாா்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனா்.